Food

சவ் சவ்வின் மருத்துவ பண்புகள்

சவ் சவ்வில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சவ் சவ்வில் விட்டமின் சி, பி6 (பைரிடாக்ஸின்), பி5 (பான்டாதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன.

மேலும் இதில் பி1(தயாமின்), பி2(ரிஃபோ ப்ளோவின்), பி3(நியாசின்), இ, கே ஆகியவையும் உள்ளன.

இக்காயில் தாதுஉப்புக்களான கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.

மேலும் இக்காயில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட்டுகள், புரோடீன்கள், நார்ச்சத்து முதலியவைகளும் உள்ளன.

சவ் சவ்வின் மருத்துவப் பண்புகள்

புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெற

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், செலீனியம், விட்டமின் இ, மாங்கனீசு, துத்தநாகம், விட்டமின் பி6 ஆகியவை புற்றுநோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்குகின்றன.

விட்டமின் சி, ஃபோலேட்டுகள், விட்டமின் பி6 ஆகியவை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் தடைசெய்கிறது. விட்டமின் இ குடல் புற்றுநோயினைத் தடைசெய்கிறது.

விட்டமின் சி வயிறு, மார்பகம், வாய், கருப்பை, நுரையீரல், பெருங்குடல் ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவதை தடைசெய்கிறது.

இந்த விட்டமின்கள் வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடைசெய்கிறது. இதனால் செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்கள் தடுக்கப்பட்டு புற்றுநோய் உண்டாவது கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சவ் சவ்வினை உண்டு புற்றுநோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

உடலுக்குத் தேவையான ஆற்றலினைப் பெற

சவ் சவ்வில் காணப்படும் மாங்கனீசு கொழுப்பு மற்றும் புரதத்தினை உடைத்து உடலுக்குத் தேவையான ஆற்றலினை வழங்குகிறது. எனவே சவ் சவ்வினை காலை உணவில் சேர்த்து நமது உடலுக்குத் தேவையான ஆற்றலினை உடனடியாகப் பெறலாம்.

நல்ல செரிமானம் பெற மலச்சிக்கல் தீர

சவ் சவ்வில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் உள்ள கழிவு நச்சினை ஒன்று சேர்த்து மென்மையாக்கி கழிவாக வெளியேற்றுகிறது. இதனால் மலச்சிக்கல் வருவது தடுக்கப்படுகிறது.

மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்கவும் நார்ச்சத்து உதவுகிறது. எனவே இக்காயினை உண்டு நல்ல செரிமானத்தையும், மலச்சிக்கல், மூலம் போன்றவை ஏற்படாமலும் தடுக்கலாம்.

இதய நலத்திற்கு

சவ் சவ்வில் ஃபோலேட்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய இதய நலத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

ஃபோலேட்டுகள் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீனை அளவினைக் குறைக்கிறது. இதனால் இதய நோய் வருவது தடுக்கப்படுகிறது. ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள உணவினை உட்கொள்ளும்போது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 55 சதவீதம் குறைக்கப்படுகிறது.

பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

மெக்னீசியம் இரத்தம் உறைதலைத் தடைசெய்து இதயத்துடிப்பினை சீராக்கி நல்ல கொலஸ்ட்ராலின் அளவினை அதிகரிக்கிறது. எனவே இதய நலம் பேண இக்காயினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கர்பிணிகளின் ஆரோக்கியத்திற்கு

பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது இரத்தத்தில் ஃபோலேட்டுகளின் அளவானது குறைவாக இருக்கும். ஃபோலேடு பற்றாக்குறையின் காரணமாக குழந்தையின் பிறப்புக் குறைபாடுகள், இதயக்குறைபாடுகள், நரம்புக்குறைபாடுகள் ஆகியவை ஏற்படும்.

குழந்தையானது பிறக்கும்போது எடை குறைவாக இருக்கும். எனவே ஃபோலேட்டுகள் அதிகம் உள்ள சவ் சவ்வினை உணவில் சேர்த்துக் கொள்வது நலம் ஆகும்.

ஆரோக்கியமான சருமத்தினைப் பெற

சவ் சவ்வில் விட்டமின் இ, ஃபோலேட்டுகள், விட்டமின் சி, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. துத்தநாகம் சருமத்தில் எண்ணெய் சுரப்பினைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் பரு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

விட்டமின் சி சருமம் மூப்படைவதை தள்ளிப்போடுகிறது. ஃபோலேட்டுகள் சருமத்தின் உறுதிப்பாட்டினை அதிகரிக்கிறது. எனவே ஆரோக்கியமான சருமத்தினைப் பெற சவ் சவ்வினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அனீமியாவைத் தடுக்க

இரும்புச்சத்து குறைபாட்டினால் அனீமியா நோய் உண்டாகிறது. சவ் சவ்வில் உள்ள விட்டமின் பி2 மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணு உற்பத்திக்கு உதவுகிறது. இக்காயில் உள்ள ஃபோலேட்டுகள் இரத்த சிவப்பணுக்கள் முழுமையாக வளர்ச்சி அடைய உதவுகிறது.

இதில் உள்ள விட்டமின் கே-யானது காயம் உண்டாகும்போது இரத்த உறைதலை உண்டாக்கி இரத்த சிவப்பணுக்களைச் சேமிக்கிறது.

மேலும் இக்காயில் காணப்படும் விட்டமின் சி, செம்புச்சத்து, துத்தநாகச்சத்து ஆகியவை இரும்புச்சத்தினை உடல் உட்கிரகிக்க உதவுகின்றன. எனவே சவ் சவ்வானது அனீமியாவிற்கு சிறந்த தீர்வாக உள்ளது.

ஆரோக்கிய உடல்எடை குறைப்பிற்கு

சவ் சவ்வானது அதிகளவு நார்ச்சத்தினையும், குறைந்த எரிசக்தியினையும் கொண்டுள்ளது. சவ் சவ்வினை உண்ணும்போது இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்தினால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது.

இதனால் உண்ணும் உணவின் அளவானது குறைகிறது. இதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் இடைவேளை உணவாக சவ் சவ்வினை உண்டு ஆரோக்கியாக உடல்எடை குறைப்பினைப் பெறலாம்.

The Bishops weed Powder (Omam Powder)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *