காவிரி வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு – தீர்வு ஏற்படுமா?
125 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் இன்று சற்று நேரத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.
மத்திய அரசு அமைத்த காவிரி நடுவர் மன்றம் 1991ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு அளித்திருந்தது. பின்னர் 2007ம் ஆண்டு பிப்.5ம் தேதி காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
10 மாத இடைவெளியில் 192 டி.எம்.சி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டி.எம்.சி அதாவது 264 டி.எம்.சி. நீர் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், 132 டி.எம்.சி மட்டுமே தர முடியும் என கர்நாடகா மேல்முறையீடு செய்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிராக தமிழகம், கர்நாடகாவைப் போல் கேரள, புதுச்சேரி அரசுகளும் வழக்கு தொடர்ந்தது.
2017 செப் 20ம் தேதி அனைத்து வாதங்களும் முடிந்த பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இறுதி தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்குகிறது. தலைமை நீதிபதி தீபர் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், கன்வில்கர் அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது. இதன் மூலம் 125 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்சனை இன்று முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.