குஜராத் மாநிலங்களவை தேர்தல்: வெற்றி பெறுவாரா அகமது படேல்?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான அகமது படேல் குஜராத் மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அம்மாநிலத்தில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் நான்கு பேர் களத்தில் உள்ளனர். அகமது படேல் வெற்றி பெறுவாரா? இதுவே தற்போது தேசிய அரசியலில் முக்கியமாக விவாதிக்கப்படும் செய்தி.

குஜராத் மாநில மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 176. இதில், பாஜக 121 இடங்களைக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 51 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு இடத்தையும், எஞ்சியுள்ள ஒரு இடத்தை சுயேட்சையும் பெற்றுள்ளனர்.

தற்போது இம்மாநிலத்தில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பாக மூன்று பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பாக அகமது படேல் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சங்கர்சிங் வகேலா விலகியதை அடுத்து ஆறு எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகினர். இதில் 3 பேர் பாஜகவில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்களை தக்கவைக்கவே 44 பேரை பெங்களூரு அழைத்துச் சென்று பாதுகாத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.

ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட 45 வாக்குகள் தேவை என்ற நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் பல்வந்த்சின் ராஜ்புத் வெற்றி பெற மேலும் 11 வாக்குகள் தேவை. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் 44 உறுப்பினர்கள் பெங்களூருவில் பாதுகாக்கப்பட்டு வருவதால் அகமது படேல் வெற்றி பெற மேலும் ஒரு வாக்குத் தேவைப்படுகிறது. இது சுயேச்சையிடம் இருந்தோ, ஐக்கிய ஜனதா தளத்திடம் இருந்தோ, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்தோ கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போதுள்ள நிலையில் அகமது படேல் வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கட்சி மாறி பலர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *