வாதம் போக்கும், மூலம் விரட்டும், புத்துணர்ச்சி தரும் தொட்டாற்சுருங்கி!
தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதற்கு தொட்டாற்சுருங்கி ஒரு உதாரணம். Mimosa Pudica என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட இது, தொட்டாற்சிணுங்கி, தொட்டால்வாடி, நமஸ்காரி, காமவர்த்தினி, இலச்சி, இலட்சுமி மூலிகை என்ற பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. பரந்து விரிந்து வளரும் இந்த மூலிகையில், சிறு முட்கள் இருக்கும். தொட்டால் இதன் இலைகள் சுருங்கிவிடும் என்பதாலேயே இதைத் தொட்டாற்சுருங்கி என்று அழைக்கின்றனர். மென்மையான இளஞ்சிவப்பு நிறப் பூக்களைக் கொண்டது. பூக்கள் மொத்தமாக இருப்பதால் பழங்களும் அப்படியே காணப்படும்.
வன்னி மரத்தைப் போல தெய்வசக்தி நிறைந்த மூலிகை என்பதால் துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதுபோல வீடுகளில் தொட்டாற்சுருங்கிச் செடியை வளர்க்கலாம். இதன் முழுத் தாவரமும் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையையும் கொண்டது.
சர்க்கரை நோய்க்கு இது நல்லதொரு நிவாரணியாகச் செயல்படுகிறது. தொட்டாற்சுருங்கியின் வேர் மற்றும் இலையை சம அளவு எடுத்து தண்ணீரில் நன்றாக அலசி வெயிலில் காய வைத்துப் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். இதே பொடியை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலம், பவுத்திரம் போன்ற நோய்கள் குணமாகும்.
தொட்டாற்சுருங்கி வேர் ஒரு கைப்பிடி எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இதை மண் சட்டியில் போட்டு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காக ஆகுமளவு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அதில் அரை அவுன்ஸ் அளவு தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் சிறுநீரகக் கல் அடைப்பு, நீரடைப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும்.
இதன் வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு மூன்று பங்கு தண்ணீர் விட்டு ஒரு பங்காகும் வரை நன்றாகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். சூடு ஆறியதும் கஷாயத்தை வடிகட்டி அதில் அரை அவுன்ஸ் வீதம் தினமும் இரண்டு தடவை சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்; உடல் தேறும்.
தொட்டாற்சுருங்கி இலையைக் களிமண் சேர்த்து அரைத்துப் பற்று போட்டு வந்தால் வாத வீக்கம் விலகும். கீல் வாதமும் சரியாகும். இதன் இலையை மையாக அரைத்து சுமார் 6 நாள்கள் 10 கிராம் வீதம் காலை மட்டும் தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை மற்றும் வேரை சம அளவு எடுத்து காய வைத்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளவும். அதில் 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து பசும்பாலுடன் கலந்து குடித்து வந்தால் மூலச்சூடு, ஆசனக் கடுப்பு மற்றும் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.
இதன் இலைச் சாறு புண்களைக் குணப்படுத்தும். வெட்டுக்காயங்களைக் குணப்படுத்த முழுச் செடியையும் அரைத்து சாறு எடுத்து தினமும் இரண்டு தடவை தடவினால் பலன் கிடைக்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது இந்த மூலிகை. இதன் முழுச் செடியையும் இடித்துச் சாறு எடுத்து அதில் 4 டேபிள்ஸ்பூன் எடுத்து இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் மூன்று தடவை அவ்வப்போது தயார் செய்து குடித்து வந்தால் ரத்தப்போக்கு கட்டுப்படும். இதேபோல் ஒரு கைப்பிடி இலையுடன் சிறிது சீரகம், வெங்காயம் சேர்த்து அரைத்து எலுமிச்சைப் பழ அளவு சாப்பிட்டாலும் மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கு கட்டுப்படும்.
கைகால்களில் ஏற்படும் மூட்டு வீக்கத்தைக் குணப்படுத்த இதன் இலையை மையாக அரைத்துப் பூசி வந்தால் பலன் கிடைக்கும். அலர்ஜி, தோல் தடிப்புகள் குணமாக தொட்டாற்சுருங்கியின் இலைச் சாற்றைப் பூசினால் பலன் கிடைக்கும்.
தொட்டாற்சுருங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து மண் சட்டியில் போட்டு மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்காகும் வரை காய்ச்சி கஷாயமாக்கிக் கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் வடிகட்டி தினமும் இரண்டுவேளை சாப்பிட்டு வந்தால் உடல் தளர்ச்சி, சோர்வு நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும். விந்தணு பிரச்னையும் தீரும்.