பயன்கள்:
எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். உடல் வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புழுக்கள் பிரச்னைகளுக்கு பவளமல்லி மருந்தாகிறது. நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பவளமல்லியின் பயன்கள் குறித்து பார்க்கலாம். பல்வேறு நன்மைகளை கொண்ட பவளமல்லி சொரசரப்பான இலைகளை கொண்டது. கொத்தான பூக்களை உடையது. காம்புகள் சிவப்பு நிறமும், பூக்கள் வெள்ளை நிறமும் உடையவை. இந்த பூக்கள் நல்ல மணத்தை கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை தணிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பனங்கற்கண்டு, இஞ்சி.
செய்முறை: பவளமல்லி இலைகள் 5 எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும். சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் இருவேளை குடிப்பதால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் சரியாகும். சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
பவளமல்லி இலைகள் நோய் நீக்கியாக விளங்குகிறது. வியர்வையை தூண்டக்கூடியது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், தேன்.
செய்முறை: பவளமல்லி இலைகள் 5 எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் தேனுக்கு பதிலாக சீரகம் அல்லது மிளகு சேர்க்கலாம். இந்த தேனீரை காலை, மாலை என 50 மில்லி அளவுக்கு குடித்துவர மூட்டு வலி குணமாகும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.பவளமல்லி இலையை பயன்படுத்தி வயிற்று புழுக்களை வெளியேற்றும் மருத்துவத்தை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: பவளமல்லி இலை, தேன், உப்பு.
செய்முறை: பவளமல்லி இலைசாறு ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன், சிறிது உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் இதை எடுத்துக்கொள்ள வயிற்று புழுக்கள் வெளியேறும். கீரி பூச்சிகள், நாடா புழுக்கள், நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புதமான மருந்தாகிறது. வயிற்றை சுத்தப்படுத்தும் மூலிகையாக பயன்படுகிறது.
பவளமல்லி இலைகளை தேனீராக்கி குடிப்பதால் விஷ காய்ச்சல்கள் அனைத்தும் விலகிப்போகும். இடுப்பு வலி, கைகால் வலி உள்ளிட்ட வலிகளையும் போக்க கூடியதாக பயன்படுகிறது. பூஞ்சை காளான்களை போக்குகிறது. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட பவளமல்லியை நாம் பயன்படுத்தி நலம் பெறலாம். காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 6 துளசி இலைகளுடன், 6 மிளகை பொடித்து நீர்விட்டு தேனீராக்கி தினமும் குடிப்பதனால் ஆரம்ப கட்டத்திலேயே காய்ச்சலை தடுக்கலாம்.