இருமலை கட்டுப் படுத்தும் வாடாமல்லி

பயன்கள்:

வாடாமல்லியின் மருத்துவ குணங்களை இன்றைக்கு நாம் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.மலர்களின் மருத்துவ குணங்களை பார்த்து வரும் வரிசையில் வாடாமல்லியும் மருத்துவ குணம் கொண்டு விளங்குகிறது.

இதன் இலைகள் கூட மருந்தாக பயன்படுகிறது. இது வறண்ட பகுதியில் கூட வளரக் கூடிய ஒரு செடியாக உள்ளது. இந்த செடிகள் மிகவும் குறைவாக ஒன்று அல்லது இரண்டு அடி உயரம் வரை மட்டுமே வளரும்.

வாடாமல்லி பூக்கள் எளிதாக சந்தைகளில் அன்றாடம் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். கோம்பிரினா குளோபோசா என்பது இதன் தாவர பெயர் ஆகும். குளோபஸ் அமராச்சஸ் என்ற பெயரும் இதற்கு உள்ளது. இது வயலட் நிறத்தில் பூக்கும். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலும் வாடாமல்லி பூக்கள் கிடைக்கும்.

அன்றாடம் நாம் அழகு பொருளாகவும், அலங்காரத்திற்காகவும் பயன்படும் இந்த வாடாமல்லியின் மலர், இலை அனைத்தும் மேற்பூச்சு மருந்தாகவும், உள்ளே உட்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுகிறது. இருமலை தணிக்கக் கூடியதாக, காய்ச்சலை போக்கக் கூடியதாக வாடாமல்லி அமைகிறது.  இதய நோய்களுக்கு ஒரு அற்புதமான மருந்தாக அமைகிறது. சிறுநீரக கோளாறுகளை சரி செய்து சிறுநீர் சீராக செல்ல உதவுகிறது. அந்த வகையில் வாடாமல்லி மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தற்போது வாடாமல்லியை பயன்படுத்தி மருந்து ஒன்று தயாரிப்பதன் செய்முறையை பார்க்கலாம்.

வாடாமல்லியை அரைத்து அதன் பேஸ்ட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கப்பில் தயிர் எடுத்துக் கொள்ள வேண்டும். வாடாமல்லி பேஸ்டையும், தயிரையும் தேவையான அளவு சேர்த்து நன்றாக குழைய கிளற வேண்டும். தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம். இதை உடலின் மேற்பூச்சாக பயன்படுத்தும் போது தோலின் மிருது தன்மையை பாதுகாக்கிறது. தோலில் ஏற்படும் சுருக்கங்கள், உலர் தன்மை ஆகியவற்றை போக்கக் கூடியதாக இது விளங்குகிறது. தோலில் ஏற்படும் வயோதிகம் போன்ற தன்மையை மாற்றக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது.

அதே போல் தோலின் கரிய நிறம் மாற்றம் அடையும். நுண் கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை இந்த மலருக்கு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாக வாடாமல்லி விளங்குவதால், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளையும் பாதுகாக்கும் தன்மை உடையதாக விளங்குகிறது.அதே போல் வாடாமல்லி பூக்களை பயன்படுத்தி சளி, இருமல், ஆஸ்துமாவுக்கான மருந்தை தயாரிக்கலாம். வாடாமல்லி இதழ்களை அரைத்து எடுத்துக் கொண்ட பேஸ்ட், சுக்குபொடி, மிளகுபொடி, தேன் இவற்றை கொண்டு இருமல் மற்றும் ஆஸ்துமாவை தணிக்கும் மருந்தை தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவுக்கு வாடாமல்லி இதழ் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். இரண்டு சிட்டிகை சுக்கு பொடி, இரண்டு சிட்டிகை மிளகு பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு தேன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை சூடாக இருக்கும் போதே பருகுவதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் தொல்லையை தணிக்கிறது.

இந்த தேனீரை முறையாக பருகுவதன் மூலம் சளியை கரைத்து கட்டுப்படுத்துகிறது. இருமலை போக்குகிறது. பீட்டா சயனீஸ், ஆல்பா சயனீஸ் என்று சொல்லக் கூடிய வேதிப்பொருட்கள் வாடாமல்லியில் காணப்படுகிறது. இது போன்ற பல்வேறு வேதிப் பொருட்கள் காரணமாக வாடாமல்லி ஆன்டி பயாட்டிக்காக செயல்படுகிறது. இதனால் இருமலை தடுக்கக் கூடியதாக, காய்ச்சலை தணிக்கக் கூடியதாக வாடாமல்லி வேலை செய்கிறது. வாடா மல்லியால் செய்யப்படும் இந்த கஷாயத்தை வயிற்று வலியால் அழும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் வயிற்று வலி தணிகிறது. இது ஒரு கிரைப் வாட்டரை போல வேலை செய்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *