கேரள அரசுக்கு தடைவிதிக்க முடியாது: பசுமை தீர்ப்பாயம்
தேக்கடி ஆனைவாசலில் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்க தடை விதிக்க முடியாது என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
வாகன நிறுத்தம் அமைக்கும் இடம் தமிழக பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அதற்குத் தடை விதிக்குமாறு கோரிய தமிழக அரசின் மனுவை பசுமைத் தீர்ப்பாயம் நிராகரித்தது. வாகன நிறுத்தம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் யாருக்குச் சொந்தம் என உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் பசுமைத் தீர்ப்பாயம் கூறியது. மேலும் வாகன நிறுத்தம் அமைக்க தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியதால் கேரள அரசு வாகன நிறுத்தம் அமைக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முல்லை பெரியாறு, இடுக்கி புலிகள் சரணாலயத்தில், கேரள வனத்துறை சார்பில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. வாகன நிறுத்தம் அமைக்கும் இடத்தை மாற்றக் கோரி, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால், வாகன நிறுத்தம் அமைக்கும் பணி தேக்கடி ஆனைவாசல் பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் அந்தப் பகுதியில் வாகன நிறுத்தம் அமைக்கும் இடம் தமிழக பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்பதால் வாகன நிறுத்த பணிக்கு தடை விதிக்க வேண்டும் என தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக பொதுப்பணி துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.