ஏறுமுகத்தில் சின்ன வெங்காயம் விலை: பொதுமக்கள் அவதி
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தாராபுரம், கும்மிடிப்பூண்டி, உடுமலைப்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு சின்ன வெங்காயம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. உதாரணத்திற்கு, ஒருநாளைக்கு 3 ஆயிரம் டன் வரவேண்டிய இடத்தில் 30 டன் மட்டுமே வரத்து இருப்பதாக கூறப்படுகிறது. போதிய வரத்து இல்லாததன் காரணமாகவே சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய் முதல் 180 வரை விற்கப்படுகிறது. போதிய மழையில்லாமல் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடாததே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம் என வியாபாரிகள் கூறுகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து சின்ன வெங்காயத்தின் வரத்து இருக்கும் பட்சத்தில் விலை குறையும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.