பாலில் வெல்லம் கலந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
குளிர்காலத்தில் ஏராளமான சரும மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதால், வருமுன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்களில் உடனே ஈடுபட வேண்டியது அவசியம். முக்கியமாக உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். அதுவும் கால்சியம் அதிகம் நிறைந்த பாலில் வெல்லத்தை சேர்த்து அன்றாடம் குடித்து வந்தால், உடலினுள் பல மாயங்கள் நிகழும். நம் அனைவருக்குமே பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது தெரியும்.
அத்தகைய பாலில் சுவைக்காக சர்க்கரை சேர்க்காமல், வெல்லத்தை கலந்து குடித்தால், நல்ல சுவையுடன் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
இக்கட்டுரையில் ஒருவர் பாலில் வெல்லம் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நோயெதிர்ப்பு சக்தி :
பால் கால்சியம் வளமான அளவில் உள்ளது. இது எலும்புகளை வலிமைப்படுத்துவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலிமைப்படுத்தும். அதுவும் பாலில் வெல்லத்தை சேர்த்து குடித்தால், குளிர்காலத்தில் உடலைத் தாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
செரிமானம்:
பெரும்பாலானோர் அஜீரண கோளாறால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இதற்கு முறையற்ற வாழ்க்கை முறை அல்லது ஜங்க் உணவுகளை அதிகம் உண்பது காரணமாக இருக்கலாம். ஆனால் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம் போன்றவற்றில் இருந்து வெல்லம் விடுவிக்கும். அதுவும் பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, அஜீரண கோளாறு ஏற்படுவதில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
மூட்டு வலி:
எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை கொண்டவர்களுக்கு பால் மிகவும் நல்லது. பாலில உள்ள கால்சியம் எலும்புகளை வலிமைப்படுத்தி, மூட்டு வலிகளைக் குறைக்கும். அதிலும் பாலுடன் வெல்லத்தை கலந்து குடிப்பதால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
கர்ப்ப கால இரத்த சோகை:
கர்ப்ப காலத்தில் பெண்கள் சிசுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகளை உண்பதோடு, தங்களது உடலையும் கவனிக்க வேண்டும். நிறைய பெண்கள் கர்ப்ப காலத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். ஆகவே தான் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார்கள். ஒருவேளை மாத்திரைகளை எடுக்க பிடிக்காவிட்டால், பாலில் வெல்லத்தைக் கலந்து குடியுங்கள். இதனால் இரத்த சோகையைத் தடுக்கலாம்.
எடை குறைவு :
பால் உடல் எடையைக் குறைக்கும் என்பது தெரியுமா? அதுவும் தினமும் பாலில் வெல்லத்தை கலந்து குடிக்க, விரைவில் எடை குறையும். வெல்லம் ஒரு இயற்கை சுவையூட்டி என்பதால், சர்க்கரையால் உடல் பருமனடைவதைத் தடுக்கலாம்.
சரும ஆரோக்கியம் :
குளிர்காலத்தில் தொடர்ச்சியாக சரும பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? எவ்வளவு பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், சருமம் பொலிவோடு காணப்படவில்லையா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் பாலுடன் சிறிது வெல்லத்தைக் கலந்து குடியுங்கள். இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவோடும், வறட்சியின்றியும் இருக்கும்.
மாதவிடாய் வயிற்று வலி :
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிற்று வலியும், வயிற்று பிடிப்புக்களும் ஏற்படும். இம்மாதிரியான நேரத்தில் பாலில் வெல்லத்தைக் கலந்து குடிக்க, உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் தினமும் பாலில் வெல்லத்தைப் போட்டு குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் மனநிலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைத் தவிர்க்கலாம்.
மெட்டபாலிசம் :
பாலில் வெல்லத்தைக் கலந்து குடிப்பதால் முறையான செரிமானம் நடைபெறுவதோடு, உடலின் மெட்டபாலிச அளவும் மேம்படுத்தப்படும். உடலின் மெட்டபாலிச அளவு சீராக இருந்தால், நாள் முழுவதும் உடலியக்கமும் சீராக இருக்கும்.
எலும்பு ஆரோக்கியம் :
வெல்லத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாலில் உள்ள கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முன்பிருந்ததை விட எலும்புகளை மேலும் வலிமையாக்கும். எனவே தவறாமல் வெல்லம் கலந்த பாலை அன்றாடம் குடியுங்கள்
இரத்த சுத்தம்:
வெல்லத்தின் முக்கியமான மருத்துவ குணம் என்றால், அது இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். ஆகவே உங்கள் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாக வேண்டுமானால், பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள்.
ஸ்டாமினா அதிகரிக்கும் :
சர்க்கரை, வெல்லம் இரண்டுமே கார்போஹைட்ரேட்டுகளை தூண்டி, உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கும். ஆனால் இந்த இரண்டிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது சர்க்கரையில் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் சிம்பிள் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனால் வெல்லத்திலோ காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட் உள்ளது. இது உடைவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், நீண்ட நேரம் ஆற்றலைத் தக்க வைக்கும். ஆகவே உடலில் ஆற்றல் நிலைத்திருக்க வேண்டுமானால், பாலில் வெல்லம் கலந்து குடியுங்கள்.