அடுத்த மாதம் அதிரடியாக அறிமுகமாகிறது லெனோவோ k8 நோட்
லெனோவோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான K8 நோட் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
லெனோவோ ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பரவலாக அதிகரித்து வருகிறது. இது ஸ்மார்ட்போன் தயாரிப்பில் லெனோவோ தனக்கென்று தனி இடத்தை பிடித்துவிட்டது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக தனது அடுத்த தயாரிப்பை லெனோவா ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
லெனோவோ நிறுவனத்தின் இதற்கு முந்தைய தயாரிப்பான லெனோவோ K6 நோட் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த நிலையில் அடுத்த படைப்பாக லெனோவோ K8 நோட் வெளிவர உள்ளது. K7 நோட்டை தவிர்த்துவிட்டு லெனோவோ k8 நோட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கில்லர்நோட் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரிய பேட்டரி, 5.5 இன்ச் புல் ஹெச்டி டிஸ்ப்ளே வசதியுடன் k8 நோட் வெளிவரலாம் எனத் தெரிகிறது. மேலும் 4ஜிபி ரேம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி K8 நோட்டில் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நெளகாட் இயங்குதளத்தில் இரட்டை சிம் கார்டுகள் வசதியுடன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி தான் இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட தகவல்கள் என்னவென்று தெரியவரும்.