செல்ஃபி எடுக்க கற்றுக்கொடுக்கும் மொபைல் ஆப்

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

செல்ஃபிக்களின் ஆதிக்கம் சமூகவலைதளங்களில் அதிகரித்து வரும்நிலையில், மக்களுக்கு சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு இந்த செயலி கற்றுக்கொடுக்கும் என்கிறார்கள். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவும் என்று கூறுகிறார்கள் வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் முகங்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பயனாளர்கள் மிகச்சிறந்த செல்ஃபிக்களை எடுக்க முடியும் என்கிறார் ஆய்வுக்குழுவில் இடம் பெற்றிருக்கும் வோஜெல். செல்ஃபி எடுத்தபிறகு, அவற்றை எடிட் செய்யும் செயலிகளுக்கு மத்தியில், இந்த செயலி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த செயலி மூலம் நீங்கள் செல்ஃபிஎடுக்கும்போது கேமிரா கோணம், முகத்தின் அளவு, ஒளி கிடைக்கும் திசை உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பெறலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *