தங்க சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு வகையான பாக்டீரியாவிலிருந்து கூட தங்கம் வெளிவரும் என்ற புதிய ஆய்வை தெளிவுப்படுத்தியுள்ளனர் ஆய்வாளார்கள்.
மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் Cupriavidus metallidurans என்றழைக்கப்படும் பாக்டீரியாவில் இருந்து தங்கம் வெளிவருவதை உறுதி செய்துள்ளனர். இந்தப் பாக்டீரியா தங்கம் உருவாகத் தேவைப்படுவது கோல்டு குளோரைடு. கோல்டு குளோரைடு எனு ரசாயன பொருட்களை விழுங்கி தங்கத்தை உமிழ்வதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாக்டீரியா, கோல்டு குளோரைடு எனும் நஞ்சைத் தங்கமாக மாற்றுகிறது. தங்க அயனிகள் தண்ணீரில் கரையும் போது பாக்டீரியா விஷமாக மாறி போகிறது. இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள Delftibactin A என்ற புரதத்தை அது உருவாக்குகிறது. இது ஒரு கவசமாக செயல்பட்டு விஷம் கலந்த அயனிகளை, பாதிப்பு இல்லாத தங்கத் துகள்களாக மாற்றி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது. இது 24-காரட் 99.9% சுத்தமான தங்கம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்டீரியாவை வைத்து தங்கம் உருவாக்கும் ஆராய்ச்சிக்காக பேராசிரியர்கள் கஸெம் காஷெஃபி மற்றும் ஆடம் பிரவுன் ஆகியோர் தனி ஆய்வகத்தை உருவாக்கியுள்ளார்கள். காஷெஃபி கூறுகையில், கோல்டு குளோரைடுலிருந்து தங்கத்தை இந்த பாக்டீரியா உருவாக்குவதாகவும், பரிசோதனை கூடத்தில் பாக்டீரியாவை வைத்துவிட்டு, கோல்ட் குளோரைடை உள்ளே செலுத்தினால் ஒரு வாரத்தில் அது அனைத்தையும் தங்கமாக மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளார். இதில் எந்த மேஜிக்கும் இல்லை என்று கூறிய அவர், நுண்ணுயிர் ரசவாதம் என்றழைக்கப்படும் ஒரு இயற்கை நிகழ்வு தான் இது எனவும் விளக்கமளித்தார்.