ஏர்செல்லின் கடைசி நாளை அறிவித்த டிராய்!

ஏர்செல் நிறுவனம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி மூடப்படும் என டிராய் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏர்செல் நிறுவனம் ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த வாரம் இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது.
பின்னர் ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் எண் மூலம் வேறு நெர்வொர்க்கு மாற முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் டவர் நிறுவனங்களுடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் ஏர்செல் சேவைகள் முடக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டது.
ரூ.15,500 கோடி கடன் ஏற்பட்டதை அடுத்து திவால் என அறிவிக்க கோரி ஏர்செல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்தது. அதன்படி ஏர்செல் நிறுவனத்தின் சேவை வரும் ஏப்ரல் 15ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை வேறு நெட்வொர்க்கு மாற்றிக்கொள்ள நேரம் கொடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *