வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும், அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு மட்டும் நேரடியாக கவுன்சிலிங் நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அமைச்சர் கூறியதாவது: சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் 21 ஆண்டுகளாக பொறியியல் கவுன்சிலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

ஆனால் தற்போது மாணவர்கள் வசதிக்காக, அவர்கள் சந்தேகங்களை முழுமையாகத் தீர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஆண்லைன் மூலம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ‌அதற்கான வசதி இல்லாத மாணவ, மாணவியர்களுக்காக மட்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தால் ஒரு இடத்திலும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 இடங்களிலும் கவுன்சிலிங் மையங்கள் செயல்படும்

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *