தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
125 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி வருகிறது.
தமிழகத்திற்கு 10 மாத இடைவெளியில் 192 டி.எம்.சி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 192 டிஎம்சி நீர் போதாது என்பதால் கூடுதலாக 72 டி.எம்.சி அதாவது 264 டி.எம்.சி. நீர் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், 132 டி.எம்.சி மட்டுமே தர முடியும் என கர்நாடகா மேல்முறையீடு செய்தது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு எதிராக தமிழகம், கர்நாடகாவைப் போல் கேரள, புதுச்சேரி அரசுகளும் வழக்கு தொடர்ந்தது.
2017 செப் 20ம் தேதி அனைத்து வாதங்களும் முடிந்த பின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காவிரி நீர் வழக்கில் இறுதி தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வழங்கி வருகிறது. தலைமை நீதிபதி தீபர் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவ ராய், கன்வில்கர் அமர்வு தீர்ப்பு வழங்கி வருகின்றனர்..
முதலில், நீதிபதி தீபக் மிஸ்ரா திர்ப்பை வாசித்து வருகிறார். தொடக்கமே அதிரடியாக, காவிரி நதி நீரை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை எனக் கூறிய அவர், தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேபோல், கர்நாடகா மாநிலத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் 20 டி.எம்.சி. நீர் நிலத்தடி நீர் இருப்பதால், தமிழக அரசு கேட்டதை விட குறைவாக கொடுத்திருப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.
மேலும், காவிரி நீர் தொடர்பான அனைத்து வழக்குகளும் முடிவிற்கு வருவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.எனவே, இனிமேல் எந்த மாநில அரசும், காவிரி நீர் விவகாரத்தில் மேல் முறையீடு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், காவிரி மேலான்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.