காலம் கடப்பதற்குள் விழித்தெழுவோம்
கணைய நீரை (Insulin) இணைந்து கண்டுபிடித்தவரும் அதை முதன் முதலில் மனிதர்களுக்குப் பயன்படுத்தியவருமான சர் பிரட்ரிக் பேண்டிங் (Sir Frederick Banting) என்பவரின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் நாள் சர்வதேச நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறவர்கள் அதிகமாகிக் கொண்டே வருவதால், அது குறித்த விழிப்புணர்வை எல்லோரிடமும் ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. நீரிழிவு நோயின் ஆபத்துகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தித் தடுப்பு மற்றும் மருத்துவம் குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.
நீரிழிவு நோய் பற்றிய முக்கிய உண்மைகள்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 40 லட்சம் மக்கள் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களால் மரணமடைகின்றனர். நீரிழிவால் ஏற்படும் 80 சதவிகித மரணங்கள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் உள்ள நாடுகளிலேயே நிகழ்கிறது. நீரிழிவு வளர்ந்த நாடுகளை மட்டுமன்றி வளர்ந்துவரும் நாடுகளையும் பாதிக்கிறது. அது நாடு, பாலினம் அல்லது பொருளாதார நிலை பாகுபாடுகளைப் பார்ப்பதில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம். நீரிழிவு நோயின் அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் அதிகரித்தல், பசி அதிகரித்தல், பலவீனம், எடையும் தசையும் குறைதல், பார்வை மங்குதல், பாதங்களில் உணர்வின்மையும் கூச்சமும், புண் அல்லது கீறல் மெதுவாக ஆறுதல் போன்றவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாக உள்ளது.
நீரிழிவின் வகைகள்
Type 1 Diabetes
கணையநீர் சார்ந்த இந்த வகை இளம்பருவ அல்லது குழந்தைப்பருவ நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் கணையநீர் சுரப்புக் குறைபாட்டினால் குழந்தைப்பருவத்தில் உண்டாகிறது. இது பிறப்புக்குப் பின் எப்போது வேண்டுமானாலும் உண்டாகலாம். தினமும் கணையநீர் செலுத்துவதன் மூலம் இந்நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
Type 2 Diabetes
இது கணையநீர் சாராதது அல்லது பெரியவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. உடல் செல்களால் கணைய நீரை பயன்படுத்த இயலாத நிலையில் இந்த வகை நீரிழிவு ஏற்படுகிறது. பொதுவாக அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு இந்த வகை நீரிழிவு ஏற்படுகிறது. சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கர்ப்பகால நீரிழிவு (Gestational Diabetes) என்ற மற்றொரு வகை நீரிழிவு ஏற்படுகிறது.
நீரிழிவு நோயால் ஏற்படும் சிக்கல்கள்
நீரிழிவு நோயாலும் அதனோடு தொடர்புடைய மற்ற நோய்களாலும் நோய்ப்பளுவானது தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடுமையான பிரச்னைகள் ஏற்பட்டு முக்கியமான உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீரிழிவு நோயால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்றவற்றில் பிரச்னைகள் உண்டாவதோடு ஆழ்ந்த மயக்கமும் ஏற்படுகிறது. இதுபோன்ற உடலின் முக்கியமான உறுப்புகளிலும் பாதிப்புகளை உண்டாக்கி உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவதாக இருக்கிறது நீரிழிவு நோய். இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு, தற்போது அது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
நோய் தடுப்பு முறைகள்
டைப் 1 நீரிழிவைத் தடுக்க முடியாது. ஆனால் டைப் 2 நீரிழிவை வாழ்வியல் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலம் தடுக்க முடியும்.
டைப் 2 நீரிழிவைத் தடுப்பதற்கான ஆலோசனைகள்
உணவுமுறையை மாற்றியமைத்தல்
* பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள், பருப்புகள் மற்றும் முளைகட்டிய பயிர்களை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
* உணவில் எண்ணெய் பயன்பாடுகளைக் குறைத்துக் கொள்வதோடு, எண்ணெயில் பொறித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகளைப் பொறிப்பதை விட ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
* ஒரே நேரத்தில் அதிக உணவை உண்பதைவிட 2 அல்லது 3 மணி நேர இடைவெளியில் குறைந்த அளவு உணவை சரியான முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சர்க்கரை, மது, கொழுப்புள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைத் தவிர்க்க வேணடும்.
* ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுவது அவசியம்.
வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்
* மேற்சொன்ன உணவுமுறை மாற்றத்தோடு, அரை மணி நேரமாவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* மின் ஏணி, மின் தூக்கி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து படிக்கட்டுகளின் உதவியோடு நடந்து செல்லலாம்.
* பணியிடத்தில் ஒரே நிலையில் அதிக நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி சிறுசிறு இடைவேளைகள் எடுத்துக் கொள்ளலாம்.
* வெளியிடங்களுக்கு செல்லமுடியாதவர்கள் வீட்டிலேயே யோகா பயிற்சிகள் செய்யலாம்.
* சுறுசுறுப்பாகவும், நல்ல உடல் தகுதிகளோடும் இருக்க வீட்டு வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
* சிகரெட், மது, புகையிலை பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.
நிறைவாக…
உங்கள் தொலைக்காட்சி, மடிக்கணினி, கைப்பேசி, கணிப்பொறிகளை விட்டு விலகிச் செல்லுங்கள். வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள். தசைகளை நீட்டி, நடை, நீச்சல், ஓட்டம், ஜிம், விளையாட்டு போன்ற உடல் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். போதுமான உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவையே ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான ரகசியங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். காலம் கடப்பதற்குள் விழித்தெழுங்கள்!